.........'இலங்கையின் கொலைக்களம்' : 'வீடியோ எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்'?........
| Add caption |
இலங்கையின் கொலைக்களம் (Sri Lanka's Killing Field) எனும் ஆவணத்தொகுப்பு நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டது.
இளகிய மனம் படைத்தோர், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், சிறார்கள் பார்வையிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்ட போதும், பிரித்தானிய மக்கள் பெரும்பாலானோரால் இவ்வீடியோ தொகுப்பு பார்வையிடப்படது.
இவ் ஆவணப்படத்தை தொகுத்து இயக்கிய இயக்குனர் Callum Macrae, குறித்த வீடியோ தொகுப்பு சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்படுவதற்கு சற்று முன்னதாக, த கார்டியன் இணையத்தளத்தில் கட்டுரை ஒன்றை பதிவு செய்திருந்தார்.
எனது ஆவணப்படம் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு சுடரை பிரகாசமாக தூண்டிவிடும் என நம்புகிறேன் என இக்கட்டுரையில் தெரிவித்த அவர், மற்றுமொரு முக்கிய விடயமொன்றையும் இவ்வாறு கூறுகிறார்.
'இறுதிச்சமரின் இறுதி வினாடிகளில், சிறிலங்கா அரச படைகளின் விமான குண்டுத் தாக்குதல்களில் தப்பவழியின்றி சிறிய பங்கரில் (நில வெட்டுக்களில்) பச்சிளம் குழந்தையுடன் பதுங்கும் பெண் ஒருவர், 'இதை வீடியோவை வைத்து என்ன செய்ய போகிறீர்கள். அவர்கள் எல்லோரையும் கொல்கிறார்கள். நீங்களாவது பங்கருக்குள் வாருங்கள்!' என அங்கு நடப்பதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்து கதறும் ஒரு காட்சி ஒன்று இந்த ஆவண தொகுப்பில் அடங்கியிருக்கும்.
இறுதியில் அந்த பெண் கதறியபடிதான் நடந்தது. அனைவரையும் கொன்றார்கள். ஆனால் மறுமுனையில் இன்னுமொன்றும் நடந்து கொண்டிருந்தது. ஒரு ஊடகவியலாளர், நடந்ததை எல்லாம் தொடர்ந்து படம்பிடித்துக் கொண்டிருந்துள்ளார்'.
இவை உடனுக்குடன், இணையம் மூலம் வெளி உலக தொடர்புக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அந்த பெண்மணி கேட்ட கேள்வி மீண்டும் இப்போது எழுகிறது. இந்த வீடியோக்களை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்? எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கும் அந்த கதறல் குரல் தான் இந்த ஆவணப்படத்தை செய்ய தூண்டியது.
அந்த பெண்ணின் கேள்விக்கு பதில் இது தான் : 'Sri Lanka's Killing Field'
ஐ.நா மற்றும் ஆளுமை சக்தியுடைய சர்வதேச சமூகமே புரிந்துகொள்ளுங்கள்!
இது நவீன ஊடக யுகம். ஒரு நாடு தன் சொந்த மக்களையே படுகொலை செய்வதையும், போர்க்குற்றம் புரிவதையும், மனித உரிமைகளுக்கு எதிராக நடந்துகொள்வதையும், இனி இரகசியமாக உங்களால் பாதுகாக்க முடியாது.
புரிந்து கொள்ளுங்கள்!
இனியும் இப்படியான மனித கொடூரங்கள் உலகில் அரங்கேற கூடாது!
'எமக்கு உணவு, மருந்து ஒன்றும் வேண்டாம்; எம்மால் எம்மை பார்த்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் எங்களுடன் தொடர்ந்து இருங்கள். சர்வதேசத்தின் சாட்சியமாக இருங்கள்' என இறுதி யுத்தம் தொடங்கிய இடட்தில், ஐ.நா கிளை காரியாலயம் ஒன்றின் முன் தமிழ் மக்கள் கதறிய போது, செவிமடுக்காது அங்கிருந்து வெளியேறினீர்கள்'
அதன் பின் அந்த மக்களில் பெரும்பாலோனோர் உயிருடன் இல்லை. அம்மக்களிடம் ஒரு முறை தோற்றுவிட்டீர்கள். இப்போது அந்த கொலைகளுக்கு நீதி கேட்டு, உயிருடன் எஞ்சியவர்கள் நிற்கிறார்கள். இப்போது என்ன செய்ய போகிறீர்கள்?
இப்போது நீங்கள் மீண்டும் தோற்பீர்களானால், கொடுங்கோல் ஆட்சி புரியும் நாடுகளின் அரசுகளுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்பிறேன். இனி எந்தவித தயக்கமின்றி, தண்டனை கிடைக்கும் என்ற பயமின்றி, உங்களது நாட்டு சொந்த மக்களையே நீங்கள் கொல்லலாம். ஏனெனில் முடிவில் நீங்கள் இலகுவாக தப்பித்து கொள்ளலாம்!
என்கிறார் Callum Macrae.
சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான குறித்த ஆவணப்படம், தற்போது சேனல் 4 இணையத்தளத்தின் '4oD' பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்திற்கு பின்னின்று உழைத்த சேனல் 4 ஊடகவியலாளர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தெளிவு, நேர்த்தியான பின்னணி இசை என்பவற்றை கருத்தில் கொண்டும், சேனல் 4 இணையத்தளத்தில் நேரடியாக சென்று இந்த ஆவணப்படத்தை பார்வையிடும் படி கோருகின்றோம்
நன்றி - http://www.4tamilmedia.com